மக்களே உஷார்…. ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உடனே இந்த எண்ணுக்கு கால் பண்ணுங்க…. அதிரடி காட்டும் தமிழக அரசு…!

By Nanthini on ஐப்பசி 18, 2026

Spread the love

தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊர் செல்ல விரும்பும் பொதுமக்களின் முதல் தேர்வாக தனியார் ஆம்னி பேருந்துகள் விளங்குகின்றன. இருப்பினும், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பயணிகளிடம் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நீண்ட காலமாகவே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனைத் தடுத்து, பொதுமக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், இதுபோன்ற கட்டணக்கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது வேதனைக்குரியது.

   

இந்த நிலையில், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுத்து நிறுத்தத் தமிழ்நாடு அரசு தீவிர வாகனத் தணிக்கைக் களத்தில் இறங்கியுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சரின் நேரடி உத்தரவின் பேரில், மாநிலம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய சுமார் 35 சிறப்பு தணிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

   

இதன் ஒரு பகுதியாக, அக்டோபர் 15ஆம் தேதி மாலை முதல் 17ஆம் தேதி காலை வரை தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தணிக்கையில் மொத்தம் 4,233 ஆம்னி பேருந்துகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் விதிமீறல்களில் ஈடுபட்ட 778 பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கையும் இ-சலான்களும் வழங்கப்பட்டன. மேலும், அதிகக் கட்டணம் வசூலித்தது மற்றும் பிற குற்றங்களுக்காக இதுவரை 7 ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

 

இந்தச் சோதனைகளின் மூலம் விதிமீறல்களுக்காக இணக்கக் கட்டணமாக ரூ.14,38,200 நிர்ணயிக்கப்பட்டு, ஸ்பாட் ஃபைன் (Spot Fine) மூலமாக ரூ.3,83,500 உடனடியாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுத் தமிழ்நாட்டில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளிடமிருந்து செலுத்த வேண்டிய வரியாக ரூ.54,78,073 வசூலிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆன்லைனில் முன்பதிவு செய்த பயணிகளின் சீட்டுகளை உரிமையாளர்கள் ரத்து செய்தால், அவர்களுக்கு மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும்,த் தவறும் பட்சத்தில் பேருந்தின் அனுமதிச்சான்று ரத்து செய்யப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்துப் பொதுமக்கள் தங்களது புகார்களைத் தெரிவிக்க 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையோ அல்லது tc.tn@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியையோ தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் நலனைப் பாதுகாக்க அரசு இதுபோன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.