திருச்சி திமுகவில் முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவின் மகனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வழங்கப்படவில்லை என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியும் குமுறலும் வெடித்துள்ளது. மாவட்ட அரசியலில் இருந்து கே.என். நேரு விலகினாலும், தன் மகனின் அரசியல் எதிர்காலத்திற்காக 3 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய திருச்சி மாநகர மாவட்டச் செயலாளர் பொறுப்பைப் போராடிப் பெற்றுத்தந்துள்ள நிலையில், அன்பில் மகேஸுக்கு வெறும் 2 தொகுதிகளை மட்டுமே உள்ளடக்கிய தெற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
மறைந்த அன்பில் தர்மலிங்கத்தின் பேரன், ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற அடையாளம் இருந்தும், தொகுதிகளின் எண்ணிக்கையிலும் செல்வாக்கிலும் அன்பில் மகேஸ் புறக்கணிக்கப்படுவதாக வெளியாகும் இந்தச் செய்தி, திருச்சி திமுக நிர்வாகிகளிடையே பெரும் புகைச்சலையும் உள்கட்சிப் பூசலையும் ஏற்படுத்தியுள்ளது.
