“தவெக – தமாகா கூட்டணி உறுதியா?…” விஜயுடன் கைகோர்க்கும் ஜி.கே.வாசன்?… தமிழக அரசியலை உலுக்கும் புதிய கூட்டணி சிக்னல்… தமிழக அரசியலில் அடுத்த ட்விஸ்ட் ரெடி…!

By Visaka on ஆடி 10, 2026

Spread the love

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் நடிகர் விஜய் இன்று முதல்முறையாக கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார். கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 32 குடும்பங்களுக்கு, அவர்களின் தகுதிக்கேற்ப அரசுப்பணி வழங்க முதலமைச்சர் விஜய் அதிரடி முடிவு எடுத்துள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளதுடன், முதலமைச்சரின் மனிதாபிமான அடிப்படையிலான இந்த முடிவுக்கு திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராகத் திரண்டுள்ள நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தமிழக அரசின் இந்த முடிவுக்குத் தனது முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 41 பேர் உயிரிழந்த இந்தச் சோகமான சம்பவத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்காமல், மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தமிழக அரசு வேலைவாய்ப்பு வழங்கி உதவிக்கரம் நீட்டுவதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் அரசியல் கூட்டங்களில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

   

சமீப காலம் வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) அங்கம் வகித்து வந்த தமிழ் மாநில காங்கிரஸ், அண்மையில் நடந்த தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து அக்கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்தது. இத்தகைய அரசியல் சூழலில், முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசுக்கு ஜி.கே.வாசன் ஆதரவுக் கரம் நீட்டியிருப்பது தமிழக அரசியலில் புதிய கூட்டணி கணக்குகளுக்கு வித்திட்டுள்ளது. தமாகா தலைவர் வாசனின் இந்த ஆதரவு அறிக்கை, எதிர்காலத்தில் தமிழக வெற்றிக் கழகத்துடன் தமாகா கூட்டணி அமைப்பதற்கான ஒரு மறைமுகமான ‘க்ரீன் சிக்னல்’ தானா என்ற விவாதம் தற்போது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் சூடுபிடித்துள்ளது.