ஸ்டாண்ட்-அப் காமெடியர் பிரணித் மோர் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், பெண்ணின் உடல் மற்றும் சம்மதத்தை பணத்துடன் ஒப்பிட்டுப் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிகழ்ச்சியின் போது பார்வையாளர்கள் வரிசையில் இருந்த ஹிமான்ஷு ஜங்ரா என்ற இளைஞர், தான் ஒரு பெண்ணுடன் டேட்டிங் சென்ற கதையைக் கூறினார். அதில், அந்தப் பெண்ணுக்கு ரூ.370 மதிப்பிலான சிக்கன் பிரியாணி வாங்கிக் கொடுத்ததாகவும், அதற்கு ஈடாக அந்தப் பெண் தடுத்த போதும் அவளை வலுக்கட்டாயமாக உடல்ரீதியாக அணுகியதாகவும் சிரித்துக்கொண்டே விவரித்தார்.
பெண்ணின் சம்மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அந்த இளைஞரை, அங்கிருந்த காமெடியர் பிரணித் மோர் உள்ளிட்ட எவரும் தடுத்து நிறுத்தாமல் சிரித்துக்கொண்டே வேடிக்கை பார்த்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்தன. வெறும் 370 ரூபாய் பிரியாணிக்கு ஒரு பெண்ணின் சம்மதத்தையும் உடலையும் விலைபேச முடியுமா என்றும், பெண்களின் மாதவிடாய் நேப்கின் செலவே இதைவிட அதிகம் என்றும் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
பொதுமக்களின் கடுமையான கண்டனங்களைத் தொடர்ந்து, காமெடியர் பிரணித் மோர் அந்த சர்ச்சைக்குரிய வீடியோவை தனது பக்கத்தில் இருந்து நீக்கியதோடு, எதிர்மறை விமர்சனங்கள் காரணமாக தனது இன்ஸ்டாகிராம் கணக்கையும் தற்காலிகமாக முடக்கியுள்ளார். இதற்கிடையில், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய ஹிமான்ஷு ஜங்ரா, தான் வேலை செய்து வந்த நிறுவனத்தில் இருந்து உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
