தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ள ‘விஜய் அலையை’ சோஷியல் மீடியாவிலும், அடிமட்ட அளவிலும் எதிர்கொள்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு புதிய உத்தியைக் கையில் எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, திமுகவின் உட்கட்சி கட்டமைப்பில் முக்கிய மாற்றமாக மாவட்டச் செயலாளர்களின் (மா.செ.) எண்ணிக்கையை அதிரடியாக அதிகரிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
தற்போது திமுகவில் 72 மாவட்டச் செயலாளர்கள் உள்ள நிலையில், இனிவரும் காலங்களில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற கணக்கில், தமிழ்நாடு முழுவதும் இந்த எண்ணிக்கையை 117 ஆக உயர்த்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும், புதிதாக நியமிக்கப்பட உள்ள இந்த மாவட்டச் செயலாளர் பதவிகளில், சோஷியல் மீடியா மற்றும் களப்பணிகளில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்பளிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
அரசியல் ரீதியாகவும், குறிப்பாக இணையதளங்களிலும் தவெக தலைவர் விஜய் ஏற்படுத்தி வரும் தாக்கத்தைச் சமாளிக்கவும், கட்சியின் தகவல் தொழில்நுட்ப மற்றும் களப்பணிகளை மேலும் வலுப்படுத்தவுமே திமுக தலைமை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.
