தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற நிலைப்பாடோடு செயல்பட்டு வருகிறது. ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அதிமுக நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அதே சமயம் மேடையில் பேசும்போதெல்லாம் அமித்ஷா தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என தொடர்ந்து கூறி வருகின்றார். இதனிடையே அதிமுக மற்றும் பாஜக இடையே ஒரு முரண்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில் பத்தாயிரம் கிலோமீட்டர், 100 தொகுதிகள் என இபிஎஸ் தனது மூன்றாம் கட்ட பரப்புரையை முடித்துள்ளார். மக்களின் கூட்டம், அரசுக்கு எதிரான இபிஎஸ் இன் பேச்சுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக அதிமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர். அதிமுக அணிகள் பிளவு நமக்கு சாதகமாகும் என நினைத்திருந்த திமுகவுக்கு ஈபிஎஸ்-க்கு கூட்டம் கூடியது சற்று அதிர்ச்சியை தந்துள்ளதாம். இதனால் விரைவில் புதிய வியூகங்களுடன் களம் இறங்க கட்சியினருக்கு திமுக தலைமை உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
