தமிழ்நாட்டிற்கான 151 உயர்சிறப்பு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) மருத்துவ இடங்களை மாநில அரசு இழந்துள்ள விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துத் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் காரசாரமாகக் கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “ஆறாண்டுகளுக்கு முன்பாக இதே நாளில் அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 27% இடஒதுக்கீட்டைப் போராடிப் பெற்றுக் கொடுத்தோம். ஆனால் இன்றோ, நமது மாநிலத்திற்கான மருத்துவ இடங்களை இழந்து நிற்கும் சூழல் உருவாகியுள்ளது” என்று சுட்டிக்காட்டி வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசையும் அதன் சட்டக் குழுவையும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ள அவர், உச்சநீதிமன்றத்தில் வழக்கின் போது மாநில அரசு வழக்கறிஞர்கள் ஏன் அமைதி காத்தனர் என்று கேள்வி எழுப்பியுள்ளார். “மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் தொடக்கம் முதலே அலட்சியம் காட்டப்பட்டது ஏன்? நியாயம் நம் பக்கம் இருந்தும், வலுவான வாதங்களை முன்வைக்காமல் நீதிமன்றத்தில் ‘சரண்டர்’ ஆனதன் பின்னணி என்ன?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மூத்த வழக்கறிஞர்களை நியமிப்பதில் தாமதம் செய்தது ஏன் என்றும், 29-05-2026 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவின் நிலை என்ன என்றும் அவர் அடுக்கடுக்கான வினாக்களை தொடுத்துள்ளார்.
கலந்தாய்வு நடைமுறைகளில் நடந்துள்ள குளறுபடிகள் குறித்தும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். அகில இந்தியக் கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று முடிவடைவதற்கு முன்பாகவே, அவசர அவசரமாக மாநிலக் கலந்தாய்வை நடத்தி 151 இடங்கள் காலியாக இருப்பதாக அறிவித்தது திட்டமிட்டுச் செய்யப்பட்டதா என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பியுள்ளார். மேலும், தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாறுவதைத் தடுக்கும் வகையில், கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் அரசு அதைச் செய்யத் தவறிவிட்டது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இறுதியாக, “எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டிய 151 உயர்சிறப்பு மருத்துவ நிபுணர்களை நாம் இன்றைக்கு இழந்திருக்கிறோம். இது லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வு மற்றும் உயிரோடு தொடர்புடைய மிக முக்கியமானப் பிரச்சினை” என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். எனவே, பாதிப்புக்குள்ளாகியுள்ள அரசு மருத்துவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் இந்த விவகாரத்தில் அரசு உரிய விளக்கத்தையும் பதிலும் அளித்தாக வேண்டும் என அவர் உறுதியுடன் கோரியுள்ளார்.
