“ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சர்… “தேமுதிக-வுக்கு லைஃப் கொடுத்ததே நாங்கள்தான்”… தேர்தல் களத்தில் அனல் பறக்கும் எடப்பாடியின் பேச்சு”…!!

By Muthu Mani on சித்திரை 2, 2026

Spread the love

புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றினார். புதுக்கோட்டை மாவட்டம் ஜல்லிக்கட்டுக்குப் பெயர் பெற்றது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அரசு சார்பில் ₹5 லட்சம் நிதி வழங்கப்படும் என உறுதியளித்தார். மேலும், போட்டிகளில் உயிரிழப்பு ஏற்பட்டால் ₹10 லட்சம் இழப்பீடு மற்றும் வீரர்களுக்கு அரசு மூலமாக இன்சூரன்ஸ் காப்பீடு செய்து தரப்படும் என முக்கிய வாக்குறுதிகளை வழங்கினார்.

தற்போதைய திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுவது வேடிக்கையானது என்றார். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை பெருகியுள்ளதாகவும், கஞ்சா விற்பனைக்கு ஆளுங்கட்சி நிர்வாகிகளே உடந்தையாக இருப்பதாகவும் அவர் கடுமையாகக் குற்றம் சாட்டினார். அரசு அதிகாரிகளின் சொல்படி செயல்படும் ஒரு ‘பொம்மை முதலமைச்சராக’ ஸ்டாலின் இருக்கிறார் என்றும் அவர் சாடினார்.

   

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்துப் பேசிய அவர், முன்பு செந்தில் பாலாஜியை விமர்சித்த ஸ்டாலின், தற்போது அவரைப் புகழ்ந்து தள்ளுவதைக் கண்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார். திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில் 99 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டதாகக் கூறுவது மிகப்பெரிய பொய் என்றும், ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுகதான் என்றும் அவர் குறிப்பிட்டார். ஊழலும் திமுகவும் பிரிக்க முடியாதவை என்றும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

   

இறுதியாகப் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தான் ஆட்சி அமைக்கும் என்றும், முதலமைச்சராகத் தானே பொறுப்பேற்பேன் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்தார். திமுக எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அது காலியாகிவிடும் என்றும், விளம்பரங்கள் மூலமாகவே காலத்தைத் தள்ளி வருகிறார் முதல்வர் என்றும் அவர் விமர்சித்தார். தேமுதிக ஐசியூவில் இருந்தது, தேமுதிகவிற்கு உயிர் கொடுத்ததே அதிமுகதான் என்று குறிப்பிட்ட அவர், அதிமுகவை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது என்று கூறி தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.