தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. அன்றைய தினம் நிதியமைச்சர் மரிய வில்சன் பொது பட்ஜெட்டையும், ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டையும் தாக்கல் செய்யவுள்ளனர். ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த இரு மாதங்களில் முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டும், சில ரத்து செய்யப்பட்டும் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இக்கூட்டத்தொடரில் தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் வடிவம் பெறுமா என்ற பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகிறது.
நேரலை செய்யப்படவுள்ள இந்தப் பட்ஜெட் கூட்டத்தொடரை மக்கள் உன்னிப்பாகக் கவனிப்பார்கள் என்பதால், சட்டப்பேரவையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து எதிர்க்கட்சியான திமுகவின் எம்.எல்.ஏ.க்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். தவெக அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெறாவிட்டால் அது குறித்து வலுவாகக் கேள்விகளை எழுப்ப வேண்டும் என்றும், திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை சுட்டிக்காட்டி விவாதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனைகள் மற்றும் தவெக அரசின் நிர்வாகச் சிக்கல்களைப் பட்டியலிட்டு பேரவையில் காரசாரமாக விவாதிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அதில் உள்ள குறைகளை நுணுக்கமாக ஆராய்ந்து பேசுவதோடு மட்டுமல்லாமல், அவற்றை மக்கள் மன்றத்திற்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் நடந்த கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் திமுகவை விமர்சித்துப் பேசியதைத் தொடர்ந்து திமுக வெளிநடப்பு செய்திருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தொடரில் மிகக் காரசாரமான விவாதங்களை முன்னெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில், தவெக அரசின் குறைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஒரு முக்கியத் தளமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
