“லண்டனில் இருந்து ஸ்டாலின் போட்ட ஒற்றை உத்தரவு”…. நாடாளுமன்றத்தில் வெடிக்கப்போகும் அடுத்த அதிரடி…. தமிழக எம்பிக்கள் செய்யப் போகும் ‘அந்த’ காரியம்…!

By Nanthini on ஆடி 17, 2026

Spread the love

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், டெல்லி அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு போன்ற விவகாரங்களை எழுப்பத் திட்டமிட்டுள்ள வேளையில், ஆளும் மத்திய அரசோ தொகுதி மறுவரையறை மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு போன்ற முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற காய் நகர்த்தி வருகிறது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறிய பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடர் இது என்பதால், நாடாளுமன்றத்தில் திமுகவின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பரவலாக எழுந்துள்ளது.

இந்தச் சூழலில், லண்டன் சுற்றுப்பயணத்தில் இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜூலை 16) காணொளி வாயிலாக நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், மழைக்காலக் கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்தும், கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மு.க.ஸ்டாலின், “மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டின் நியாயமான உரிமையைக் காக்கவும் திமுக எம்பிக்கள் உரத்துக் குரலெழுப்புவார்கள்; அவர்கள் தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் செயல்படுவார்கள்” எனத் தனது நிலைப்பாட்டை உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

   

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மிக முக்கியமாக இரண்டு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. காவிரி இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைத் திறக்காமல் முரண்டு பிடிக்கும் கர்நாடக அரசின் சட்டவிரோதச் செயல்பாடுகளுக்கு இக்கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், கர்நாடகத்தின் பிடிவாதப் போக்கால் ஜூன் 12-ஆம் தேதியன்று மேட்டூர் அணை திறக்கப்படாமல் போனதும், இதனால் தமிழக விவசாயப் பெருங்குடி மக்கள் அடைந்துள்ள பெருந்துயரமும் கூட்டத்தில் வேதனையுடன் பதிவு செய்யப்பட்டது. அதே வேளையில், திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தவரை மேகதாது அணைக்கான கர்நாடகத்தின் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பட்டியலில் இருந்தே அதன் விண்ணப்பம் நீக்கப்படக் காரணமாக இருந்தவர் மு.க.ஸ்டாலின் என்பதும் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டப்பட்டது.

   

இறுதியாக, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு காண ‘காவிரி நடுவர் மன்றம்’ அமைக்கப்பட்டது போல, தற்போதைய மேகதாது அணைப் பிரச்சினைக்கும் தனியாக ஒரு நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை திமுக முன்வைத்துள்ளது. சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த திருத்தத் தீர்மானத்தின்படி, நடுவர் மன்றம் அமைப்பதற்கான அரசினர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது திமுகவிற்கு கிடைத்த மகத்தான வெற்றி என இக்கூட்டம் பிரகடனப்படுத்தியது. எனவே, மேகதாது அணைக்கு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்குரிய தண்ணீரை கர்நாடகம் உடனடியாகத் திறக்க மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்பதையும் இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழக மக்களின் உணர்வாக திமுக உறுப்பினர்கள் ஒலிக்கச் செய்வார்கள் என இக்கூட்டம் உறுதியளித்துள்ளது.