திமுகவில் நிர்வாக ரீதியாக பல்வேறு அதிரடி மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்காக, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனைகளின் தொடர்ச்சியாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வழக்கறிஞர்கள் அணியினருடன் முக்கிய கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் 13 மண்டலங்களைச் சேர்ந்த மாவட்ட, மாநகர மற்றும் ஒன்றிய அளவிலான ஆயிரம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கட்சி நிர்வாக மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, களத்தில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய வழக்கறிஞர்களுக்குப் புதிய பொறுப்புகளை வழங்குவது குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக, சமூக வலைதளங்களில் திமுக மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் அவதூறுப் பிரச்சாரங்களுக்குச் சட்டப்படி செக் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவெளியிலும் இணையதளங்களிலும் பரப்பப்படும் உண்மைக்கு மாறான கருத்துகள் மற்றும் எல்லை மீறும் பதிவுகள் மீது தயவுதாட்சண்யமின்றி சட்ட ரீதியான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து வழக்கறிஞர்களுக்கு மு.க.ஸ்டாலின் முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கினார். மேலும், திமுக சட்டத்துறை செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ எம்.பி, அரசியல்ரீதியான மற்றும் தனிநபர் அவதூறுகளைச் சட்டரீதியாக எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து நிர்வாகிகளுக்கு விளக்கமளித்தார்.
எதிர்வரும் அரசியல் சூழல் மற்றும் தேர்தல் களத்தை எதிர்கொள்ளும் வகையில் திமுக தனது வழக்கறிஞர் அணியை வலுப்படுத்துவதை மிக முக்கியமான நகர்வாக அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர். உட்கட்சி விவகாரங்களில் தீவிர மாற்றங்களை முன்னெடுக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ள சூழலில், விரைவில் கூடவுள்ள கட்சியின் உயர்நிலைச் செயல் திட்டக் குழு மற்றும் செயற்குழு கூட்டங்களில் பல அதிரடி முடிவுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த கூட்டத்தின் வாயிலாக திமுகவின் உட்கட்சி கட்டமைப்பு மற்றும் தேர்தல் வியூகங்கள் புதிய பரிமாணத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சியின் கட்டமைப்பை இளைய தலைமுறையினரை நோக்கி நகர்த்தும் விதமாக, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்குக் கூடுதல் பொறுப்புகள் வழங்குவது குறித்தும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு உயர் பொறுப்புகள் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல 70 வயதைக் கடந்த மூத்த நிர்வாகிகளுக்குப் பதிலாகப் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பது மற்றும் பதவி இழக்கும் மூத்த நிர்வாகிகளுக்குக் கட்சியில் மாற்றுப் பொறுப்புகளை வழங்குவது உள்ளிட்ட புதிய விதிகளை அமல்படுத்தவும் தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது.
