திமுகவை நவீன தேவைகளுக்கேற்ப மறுசீரமைக்கும் ‘DMK 2.0’ திட்டத்தின் கீழ், 110 மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் வகையில் கட்சி அமைப்புகளைப் பிரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். மேலும், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 3 முறைக்கு மேல் மாவட்டச் செயலாளராக இருந்தவர்கள் மீண்டும் அப்பதவிக்கு வர முடியாது என்ற வயது மற்றும் பதவிக் கால வரம்புகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மூத்த நிர்வாகிகள் பலரின் பதவிகள் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளதால், அக்கட்சியில் பெரும் பரபரப்பும் மாற்றங்களும் நிகழத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக நடைபெற்ற தலைமைக் கழகப் பிரதிநிதிகள் கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், இக்கடினமான முடிவுகளுக்கான பின்னணியை தெளிவுபடுத்தினார். திமுக எப்போதுமே காலத்திற்கு ஏற்ப தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் இயக்கம் என்றும், கடந்த தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுகளை ஆராய்ந்து வெற்றிப் பாதைக்குத் திரும்புவதற்காகவே கள ஆய்வுக் குழு மற்றும் மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைகளின்படி இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் வாய்ப்பளிப்பதே கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளையில், பதவிகளை இழக்கும் மூத்த நிர்வாகிகளின் பங்களிப்பு குறித்துப் பேசிய அவர், “வயது வரம்பு மற்றும் பதவிக் கால வரம்புகளால் பொறுப்புகளை இழக்கும் நிர்வாகிகள் யாரையும் தலைமை கைவிடாது. அவர்களின் அனுபவத்திற்கும் தகுதிக்கும் ஏற்றவாறு மாற்றுப் பொறுப்புகள் வழங்கப்படும்” என்று உறுதியளித்தார். இத்தகவலை மாவட்டச் செயற்குழுக் கூட்டங்களில் தொண்டர்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்குமாறும், கட்சி அமைப்புகளில் ஜனநாயக முறையில் சுதந்திரமான தேர்தல்கள் நடைபெறுவதை தலைமைக் கழகப் பிரதிநிதிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அடுத்த 15 நாட்களுக்குள் கட்சி அமைப்புகளைப் பிரிக்கும் பணிகளை நிறைவு செய்து தலைமையிடம் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட திமுக தலைவர், இதன்பின்னரே புதிய உறுப்பினர் சேர்க்கை தொடங்கும் எனக் குறிப்பிட்டார். “கொள்கையோ கட்டமைப்போ இல்லாத கட்சிகள் மின்மினிப் பூச்சிகளைப் போல வந்து போகும்; ஆனால் சூரியன் மட்டுமே நிலையானது. அமைப்பை பலப்படுத்தி கொள்கைப் பயணத்தைத் தொடர்வோம்; மீண்டும் வெல்வோம்” என்ற நம்பிக்கையான வார்த்தைகளுடன் தனது உரையை நிறைவு செய்தார்.
