தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இழுபறி நீடிக்கிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் 41 தொகுதிகள் கோரப்பட்ட நிலையில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு மூன்று சட்டமன்றத் தொகுதிகள் என்ற கணக்கீட்டின்படி 27 இடங்களை மட்டுமே ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கையைத் தாண்டி காங்கிரஸ் பிடிவாதம் பிடித்தால், அடுத்தகட்டமாகத் தங்களது ரகசிய சர்வே முடிவுகளை மேசையில் வைக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
திமுக தயார் செய்துள்ள அந்த சர்வே ரிப்போர்ட்டில், தற்போது பதவியில் உள்ள 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றும், அவர்கள் மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தத் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மீண்டும் களமிறங்கினால், அது எதிரணியான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வெற்றி பெறவே வழிவகுக்கும் என்பதைச் சுட்டிக்காட்டி, தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், குறிப்பிட்ட வேட்பாளர்களை மாற்றவும் காங்கிரஸ் தரப்பிற்கு திமுக அழுத்தம் கொடுத்து வருகிறது.
