“காதலி கண்முன்னே துடிதுடித்த காதலன்!… கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் ஓட ஓட விரட்டி கத்திக்குத்து… நடுங்க வைக்கும் பின்னணி”…!

By Muthu Mani on வைகாசி 19, 2026

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கரடிகுளம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞரான சஞ்சய் என்பவருக்கும், அண்டை கிராமமான கெச்சிலாபுரத்தைச் சேர்ந்த கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் இடையே காதல் இருந்து வந்துள்ளது. இவர்களின் காதலுக்குப் பெண்ணின் வீட்டில் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு சஞ்சய் தனது நண்பர்களுடன் சென்னை செல்வதற்காகக் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது, சஞ்சயிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என ஏமாற்றி, கவிதாவின் தந்தை குமார் மற்றும் அவரது உறவினர்களான மாரிமுத்து, சங்கரநாராயணன் ஆகியோர் கவிதாவையும் உடன் அழைத்துக் கொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர்.

அங்கு வந்த கவிதாவின் தந்தை மற்றும் உறவினர்கள், மது போதையில் சஞ்சயுடன் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த கும்பல் சஞ்சயைக் கத்தியால் கொடூரமாகக் குத்தியுள்ளது. இதில் சஞ்சயின் கழுத்து மற்றும் உடலின் பல இடங்களில் பலத்த கத்திக்குத்து விழுந்து ரத்தம் கொட்டியுள்ளது. இந்தத் திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த சஞ்சயின் நண்பர்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடியுள்ளனர். இருந்தபோதிலும், வெறித்தனம் அடங்காத அந்தக் கும்பல் சஞ்சயைத் துரத்தித் துரத்திக் குத்தியுள்ளது. இதில் எதிர்பாராதவிதமாகத் தாக்குதல் நடத்திய மாரிமுத்துவிற்கும் கத்திப்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

   

இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார், காயமடைந்த சஞ்சய் மற்றும் மாரிமுத்துவை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சஞ்சய்க்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பெண்ணின் தந்தை குமார், சங்கரநாராயணன் மற்றும் மாரிமுத்து ஆகிய மூன்று பேரைக் கைது செய்துள்ளனர். காதல் விவகாரத்தில் காதலியின் கண் முன்னாலேயே காதலன் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.