திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகேயுள்ள பில்லாந்தாங்கல் கிராமத்தில், ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த தேசுராஜ் (48) என்பவர் சாலை அமைக்கும் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ஆம் தேதியன்று, வீட்டின் அருகே மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயதுச் சிறுமியை இவர் தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் குழந்தை வராததால் தேடிச் சென்ற தாய், அச்சிறுமி தேசுராஜின் அறையிலிருந்து காயங்களுடன் அழுதுகொண்டே வெளியே வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். விசாரணையில் நடந்த விவரம் தெரியவந்ததையடுத்து, கோபமடைந்த கிராம மக்கள் அந்த நபரைப் பிடித்து செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதன் பேரில் காவல்துறையினர் உடனடியாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைச் கைது செய்தனர்.
இந்த வழக்கானது திருவண்ணாமலை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வந்தது. அனைத்து சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை ஆராய்ந்த நீதிபதி காஞ்சனா, தேசுராஜ் மீதான குற்றத்தை உறுதி செய்து, அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 15,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து காவல் துறையினர் அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
