இனி வரிசையில் நிற்கக்கூடாது… கர்ப்பிணி பெண்களுக்கு கோயில்களில் சிறப்பு தரிசனம்.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு..!!

By Soundarya on ஆனி 17, 2026

Spread the love

தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை நீண்ட வரிசையில் நிற்க வைக்காமல், சிறப்பு வழியில் விரைவாக சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை சிறப்பு வழியில் அனுமதிக்க லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், அனைத்து திருக்கோயில் அதிகாரிகளுக்கும் இந்த நடைமுறையை உடனடியாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கோவிலுக்கு வரும் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களைப் பொது வரிசையில் நிற்க வைத்து சிரமத்திற்கு உள்ளாக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இந்த உத்தரவை மீறி, சம்பந்தப்பட்ட நபர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைத்தாலோ அல்லது அவர்களிடம் தரிசனத்திற்காக முறைகேடாகப் பணம் பெற்றாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் எச்சரித்துள்ளார். தமிழகத்தின் அனைத்துக் கோவில்களிலும் பக்தர்கள் எவ்விதக் கட்டணப் புகார்களும் இன்றி, சுலபமாகத் தரிசனம் செய்வதை உறுதி செய்ய இத்தகைய சிறப்பு வழிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.