SIR பணிகளுக்குப் பிறகு தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் சுமார் 97 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அவர்களில் 66 லட்சம் பேர் இடமாறி சென்றவர்களாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்கள் வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஜனவரி 18ஆம் தேதி கடைசி நாளாகும். இதனிடையே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தார். அதன்படி இந்த சிறப்பு முகாம் முதல் கட்டமாக கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்கு ஜனவரி 3 நேற்று சிறப்பு முகாம் நடைபெற்ற நிலையில் இன்றும் முகாம் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் இன்று கடைசி நாள் என்பதால் பொதுமக்கள் விரைந்து சென்ற விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களது பெயர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியமாகும். ஆன்லைன் மூலமாக அல்லது அந்தப் பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை நேரில் சந்தித்து இன்று மாலைக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
