தமிழக சட்டமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது, மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவையில் பேசிக்கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் அவருக்குப் பின்புறமாக அமர்ந்திருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்களான சக்கரபாணி, திருவையாறு துரை சந்திரசேகர் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் தங்களுக்குள் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். மேலும், யாரையோ கிண்டல் செய்யும் வகையில் அவர்கள் காட்டிய முகபாவனைகள் அடங்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தையும், திமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தது.
இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று புதியதாகத் தொடங்கிய சட்டசபை கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவையில் சில முக்கிய அறிவிப்புகளையும் எச்சரிக்கைகளையும் விடுத்தார். நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் எவ்வித கருத்தையும் பேசக்கூடாது என்றும், சக உறுப்பினர்களை தனிப்பட்ட முறையில் முறையற்ற வார்த்தைகளால் தாக்கிப் பேசக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார். மேலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி பேரவையின் நடைமுறைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையிலும் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று உறுப்பினர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய சபாநாயகர், சட்டமன்ற பேரவை நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுவதால், உறுப்பினர்கள் அவையில் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். அவையின் நேரத்தை மிகவும் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு, விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொருட்கள் மீது உறுப்பினர்கள் சுருக்கமாக, அதாவது “சாட் அண்ட் ஸ்வீட் ஆக” (Short and Sweet) பேசி முடிக்க வேண்டும் என்றும், தங்களது தொகுதியின் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து மட்டுமே பேரவையில் எடுத்துரைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, கடந்த கூட்டத்தொடரின் போது சில உறுப்பினர்கள் சிலரைக் குறிப்பிடும் வகையில் முகபாவனை மூலம் கேலி செய்த விவகாரம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவதைச் சுட்டிக்காட்டிய சபாநாயகர், இத்தகைய செயல்கள் சட்டமன்றத்தின் மாண்பையும் கண்ணியத்தையும் குலைக்கும் செயல் என்று வருத்தம் தெரிவித்தார். உறுப்பினர்கள் தங்களின் பொறுப்பினையும் கடமையையும் உணர்ந்து இனிவரும் காலங்களில் இது போன்ற கண்ணியக்குறைவான செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்றும், அவ்வாறு மீறிச் செயல்பட்டால் அது அவையின் உரிமை மீறலாகக் கருதப்பட்டு சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் அதிரடியாக எச்சரித்தார்.
