எடப்பாடிக்கு அடுத்த அதிர்ச்சி.. “அதிமுக-விலிருந்து விலகும் வேலுமணி?”… அண்ணாமலை கொடுத்த ‘அந்த’ ஆஃபர்… கொங்கு மண்டலத்தில் வெடிக்கும் அதிரடி அரசியல்….!

By Nanthini on ஆனி 13, 2026

Spread the love

தேர்தல் தோல்விகள் மற்றும் உட்கட்சி மோதல்களால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கொங்கு மண்டல அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாகக் கருதப்படும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும், கட்சித் தலைமைக்கும் இடையே சுமுகமான சூழல் நிலவவில்லை என்ற தகவல் பரவி வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எம்எல்ஏக்களை திரட்ட முயன்று, அது தோல்வியுற்றதால் மீண்டும் அவரிடமே வேலுமணி சரணடைந்ததாகக் கூறப்பட்டாலும், அக்கட்சியின் தொண்டர்கள் இதனை இன்னும் மறக்கவில்லை. சமீபத்தில் பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் இரங்கல் கூட்டத்தில் வேலுமணியை நோக்கி தொண்டர் ஒருவர் ‘துரோகி’ என முழக்கமிட்டது இதன் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. இந்த உள்ளூர் உட்கட்சி பூசல்களாலும், சொந்த மாவட்ட நிர்வாகிகளின் அதிருப்தி குரல்களாலும் வேலுமணி கடும் அப்செட்டில் இருப்பதாகத் தெரிகிறது.

   

இந்த இக்கட்டான சூழ்நிலையைப் சாதகமாக்கிக் கொள்ளும் நோக்கில், பாஜகவின் அண்ணாமலை தரப்பிலிருந்து வேலுமணிக்குத் தூது அனுப்பப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன. ஒரே சமூகப் பின்னணியைக் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் இந்தத் தொடர்பு ஏற்படுத்தப்பட்டதாக சொல்லப்பட்டாலும், வேலுமணி இந்த அழைப்பிற்கு உடனடியாக எந்தப் பச்சைக்கொடியும் காட்டவில்லை. தற்போதைக்கு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காமல், நிதானமாகச் செயல்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். முதற்கட்டமாக அதிமுகவிற்குள்ளேயே இருக்கும் மனக்கசப்புகளைச் சரிசெய்து, தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ளவே அவர் தற்போது திட்டமிட்டுள்ளார்.

   

இருப்பினும், கட்சியின் உள்ளூர் அரசியல் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றால் மட்டுமே, அடுத்தகட்டமாக அண்ணாமலையின் ஆஃபர் குறித்துப் பரிசீலிக்கலாம் என்ற அஜெண்டாவில் வேலுமணி தரப்பு இருப்பதாக அவரது விசுவாசிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் தொடர்ந்து நீடிப்பதா அல்லது மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுப்பதா என்ற தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ள வேலுமணியின் இந்த நகர்வு, கொங்கு மண்டல அதிமுக அரசியலில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக அரசியலிலும் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.