“ஒரே ஒரு டோக்கன்.. சத்தம் போடாமல் சம்பவம் செய்த வேலுமணி”… கோவையில் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ் கிப்ட்…. 2022 பாணியில் 2026-க்கு தயாராகும் கோவை அதிமுக….!

By Nanthini on மாசி 15, 2026

Spread the love

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கொங்கு மண்டலத்தின் கோட்டையாகக் கருதப்படும் கோவையில் அரசியல் களம் அதிரடி திருப்பங்களைக் கண்டு வருகிறது. திமுக தரப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளையும் கைப்பற்ற வியூகம் வகுத்து வரும் நிலையில், அவருக்குப் போட்டியாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது பாணியில் அதிரடி ‘சர்ப்ரைஸ்’ திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளார். இது கோயம்புத்தூர் மக்களிடையே பெரும் பேச்சாக மாறியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அதிமுக சார்பில் பரிசுப் பொருட்கள் வழங்கும் பணி சத்தமில்லாமல் நடைபெற்று வருகிறது. இதற்காக ஏற்கெனவே வீடு வீடாகச் சென்று டோக்கன்கள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது விநியோகம் தீவிரமடைந்துள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது திமுக கையாண்ட அதே பாணியைப் பின்பற்றி, வேலுமணி இந்த முறை அதிமுக தொண்டர்கள் மூலம் பரிசுப் பெட்டிகளை விநியோகித்து வருகிறார்.

   

இந்த விநியோகத்தில் ஹாட் பாக்ஸ், தட்டு, வேஷ்டி, சட்டை மற்றும் சேலை ஆகியவை பிரதானமாக வழங்கப்படுகின்றன. குறிப்பாக, எஸ்.பி. வேலுமணியின் சொந்தத் தொகுதியான தொண்டாமுத்தூரில் கூடுதலாக வாட்டர் பாட்டில் மற்றும் குடைகளும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்காகத் தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தெருமுனை கூட்டங்கள் மூலமாகவும், நேரடியாக வீடு வீடாகவும் சென்று இந்தப் பரிசுப் பெட்டிகள் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்க்கப்படுகின்றன.

   

திமுக அரசு மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்கி வரும் நிலையில், அதிமுகவின் இந்த அதிரடிப் பரிசு மழை கோவையில் அரசியல் வெப்பத்தை இன்னும் அதிகரித்துள்ளது. பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வேலுமணியின் இந்த ‘கிப்ட்’ அரசியல் செந்தில் பாலாஜியின் வியூகங்களுக்குப் பலமான சவாலாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.