அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் எஸ்.பி. வேலுமணிக்கும் இடையே மீண்டும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் திட்டம் தனது தலைமையிலான அரசு தொடங்கிய திட்டம் என எடப்பாடி பழனிசாமி அண்மையில் உரிமை கோரியிருந்த நிலையில், சமூக வலைதளத்தில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள எஸ்.பி. வேலுமணி, இத்திட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டம் என்றும், அது அதிமுக அரசின் சாதனை என்றும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, தனது பதிவில் எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் குறிப்பிடாததோடு, கடந்த கால பதிவுகளிலும் அவரது புகைப்படத்தைத் தவிர்த்திருப்பது கவனிக்கத்தக்கது.
சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் தோல்வியின் எதிரொலியாகவே எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். கட்சித் தலைமை மீதுள்ள அதிருப்தி வெளிப்படையாகவே சமூக வலைதளப் பதிவுகள் மூலமாக எதிரொலிப்பது அதிமுகவிற்குள்ளும், கூட்டணி வட்டாரத்திலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், உச்சகட்டமாகியுள்ள இந்த உட்கட்சி பூசல் அதிமுக தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்க்கட்சிகளுக்கும் பேசுபொருளாக மாறியுள்ளது.
