உலகிற்கு வந்த சோதனை… கச்சா எண்ணெய் முதல் மீன் வரை.. சீனா விரிக்கும் “மிதக்கும் வலை”… அதிர்ச்சியில் இந்தியா…!

By Nanthini on சித்திரை 16, 2026

Spread the love

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான தென் சீனக் கடலிலும் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. உலகின் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி வர்த்தகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹார்முஸ் முடக்கப்பட்டதால் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இந்த இக்கட்டான சூழலைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், சீனா தென் சீனக் கடலில் உள்ள ‘ஸ்கார்பாரோ ஷோல்’ பகுதியை ஆக்கிரமிக்கத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செயற்கைக்கோள் புகைப்படங்களின்படி, பிலிப்பைன்ஸின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் இருக்கும் இந்தப் பகுதியில் சுமார் 352 மீட்டர் நீளத்திற்குச் சீனா மிதக்கும் வேலிகளை அமைத்துள்ளது. இதனை ‘தேசிய இயற்கை பூங்கா’ என சீனா அறிவித்திருப்பது, ஆக்கிரமிப்பைச் சட்டப்பூர்வமாக்கும் ஒரு தந்திரமான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. சீனாவின் கடலோர காவல்படை மற்றும் ரோந்து கப்பல்கள் அங்கு நிலைநிறுத்தப்பட்டு, பிலிப்பைன்ஸ் மீனவர்கள் விரட்டியடிக்கப்படுவது அப்பகுதியில் எப்போது வேண்டுமானாலும் ஒரு நேரடி மோதல் வெடிக்கலாம் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

   

இந்தச் சூழலை எதிர்கொள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், அமெரிக்காவுடன் ராணுவ ரீதியாகப் கைகோர்த்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, ‘பாலிகாட்டன் 2026’ என்ற பெயரில் சுமார் 17,000 வீரர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான போர்ப் பயிற்சி ஏப்ரல் 20 முதல் தொடங்க உள்ளது. சர்ச்சைக்குரிய பகுதிக்கு மிக அருகிலேயே இந்தப் பயிற்சி நடைபெறுவது சீனாவை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளது. ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா மும்முரமாக இருப்பதைச் சாதகமாக்கி, தனது ஆதிக்கத்தைச் செலுத்தச் சீனா முயல்வதாகப் பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

   

சர்வதேச நீதிமன்றத்தின் 2016-ஆம் ஆண்டுத் தீர்ப்பைச் சீனா தொடர்ந்து மதிக்காமல் புறக்கணித்து வருவது ஆசியக் கடல் பகுதியில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. வெறும் மீன்பிடி உரிமையாகத் தொடங்கிய இந்தப் பிரச்சனை, தற்போது வல்லரசு நாடுகளுக்கு இடையேயான அதிகாரப் போட்டியாக உருவெடுத்துள்ளது. உலகப் பொருளாதாரம் ஏற்கனவே ஹார்முஸ் சிக்கலால் தத்தளித்து வரும் வேளையில், தென் சீனக் கடலிலும் போர் மூண்டால் அது மீள முடியாத பொருளாதாரப் பாதிப்புகளை உலகிற்கு ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.