வாயைக் கிழித்து காலணியால் அடி…. ரூ.50,000 கடனுக்காக 10-ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்… இருளர் சமூக மாணவன் மீதான கொடூரத் தாக்குதலின் அதிர்ச்சி உண்மை…!

By Nanthini on ஆனி 18, 2026

Spread the love

விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே உள்ள சிறுவாலை கிராமத்தைச் சேர்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த தம்பதியினர், செல்லங்குப்பம் பகுதியில் செங்கல் சூளை நடத்தி வரும் பிரபாகரன் என்பவரிடம் 50,000 ரூபாய் முன்பணம் பெற்றுக்கொண்டு அங்கு வேலை செய்து வந்துள்ளனர். வாங்கிய கடன் முழுமையாகக் கழிவதற்குள் அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பியதால், பணத்தைத் திருப்பித் தருமாறு பிரபாகரன் தொடர்ந்து மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. குடும்பச் சூழ்நிலை காரணமாக சில நாட்களில் பணத்தைத் தந்துவிடுவதாக அவர்கள் உறுதியளித்தும், உடனடியாகப் பணத்தைக் கேட்டு பிரபாகரன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற அந்தத் தம்பதியினரின் 15 வயதுடைய 10-ஆம் வகுப்பு மகனை, பிரபாகரனும் மற்றொரு அடையாளம் தெரியாத நபரும் பள்ளிக்கு அருகே மறித்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். வாயைத் துணியால் கட்டி, காலணியால் அடித்ததுடன், பிளேடால் வாயைக் கிழித்து வயிற்றிலும் முதுகிலும் படுகாயப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து மாணவரின் தந்தை அளித்த புகாரின் பேரில், கெடார் காவல் துறையினர் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பிரபாகரனைக் கைது செய்துள்ளனர்; மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.