தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி முடிவுகள் இறுதி செய்யப்பட்டாலும், திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான மறைமுகமான பனிப்போர் இன்னும் குறையவில்லை. வெளியே கைகோர்த்துச் சிரித்தாலும், கட்சித் தலைமைக்கும் ராகுல் காந்திக்கும் இடையே நிலவும் ‘ஈகோ’ யுத்தம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக, அதிகாரப் பகிர்வு இல்லாத கூட்டணியில் ராகுல் காந்திக்குத் தொடக்கம் முதலே விருப்பமில்லை என்பதால், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ் தரப்பில் கடும் இழுபறி நீடித்தது.
இந்த இக்கட்டான சூழலில், திமுக சார்பில் கனிமொழி களத்தில் இறங்கி நிலைமையைச் சமாதானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், பாஜக-வின் வளர்ச்சி மற்றும் நடிகர் விஜய்யின் வருகை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டியதன் அவசியத்தைச் சோனியா காந்தியிடம் கனிமொழி விளக்கினார். “திமுக கூட்டணியில் இல்லையென்றால், தமிழகத்தில் காங்கிரஸின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும்” என்ற உண்மையை உணர்ந்த சோனியா காந்தி, கூட்டணி விவகாரத்தில் தலையிட முடிவு செய்தார்.
சோனியா காந்தியின் உறுதியான நிலைப்பாட்டிற்குப் பின்னரே, ராகுல் காந்தி வேறு வழியின்றி திமுக கூட்டணியை ஏற்றுக்கொண்டு இறங்கி வந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக, மாநிலங்களவை சீட் ஒதுக்கீட்டிலும் திமுக தங்களின் செல்வாக்கை நிலைநாட்டியது. தமிழகத்திலிருந்து தேர்வாகும் எம்பி, தமிழராகவும், கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும் என்று திமுக விதித்த நிபந்தனைக்கு இணங்க, காங்கிரஸ் தரப்பு தன் முடிவை மாற்றிக்கொள்ளும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.
தன்னுடைய விருப்பத்திற்கு மாறாகக் கூட்டணி மற்றும் சீட் விவகாரங்கள் நடந்ததால், ராகுல் காந்தி அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் எதிரொலியாக, தமிழகத் தேர்தல் பிரசாரத்தில் அவரது பங்களிப்பு மிகக் குறைவாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது. கூட்டணி தர்மத்திற்காக அவர் ஒரு பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டாலும், உடனடியாகத் டெல்லி திரும்பவே திட்டமிட்டுள்ளாராம். அறிவாலயத்தின் இந்த பிடிவாதம் வரும் தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே தற்போதைய பேசுபொருளாக உள்ளது.
