“நிலத்தை என் பெயரில் எழுது.. இல்லனா செத்து போ”…. 10 ஆயிரம் சதுர அடி நிலம்.. ஒரே போடு… பெத்து வளர்த்த அப்பாவை துடிதுடிக்க கொன்ற மகன்..!

By Nanthini on வைகாசி 8, 2026

Spread the love

சேலம் மாவட்டம் சன்னியாசி குண்டு பகுதியில் சொத்து தகராறில் தந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் தனபால், அங்கு பஞ்சர் கடை நடத்தி வந்தார். இவருக்கு இரண்டு மகள்களும், ஸ்ரீதர் (42) என்ற மகனும் உள்ளனர். தனபாலுக்கு கிச்சிப்பாளையம் பகுதியில் சுமார் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பூர்வீக நிலம் ஒன்று உள்ளது. இந்த நிலமே தந்தை மற்றும் மகனுக்கு இடையேயான மோதலுக்கு மூலகாரணமாக மாறியுள்ளது.

காய்கறி கடையில் வேலை பார்த்து வந்த ஸ்ரீதர், நண்பர்களுடன் சேர்ந்து ஆடம்பரமாக செலவு செய்ததால் அதிக அளவில் கடன் சுமைக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. தனது கடனை அடைக்க, தந்தையின் பூர்வீக நிலத்தில் தனது பாகத்தை மட்டுமல்லாமல், தனது சகோதரிகளின் பாகத்தையும் சேர்த்து தனது பெயரில் எழுதித் தருமாறு ஸ்ரீதர் தொடர்ந்து தந்தையை வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு தனபால் சம்மதிக்காததால், தந்தைக்கும் மகனுக்கும் இடையே குடும்பத்தில் அடிக்கடி கடுமையான வாக்குவாதங்களும் தகராறுகளும் ஏற்பட்டு வந்துள்ளன.

   

சம்பவத்தன்று, ஸ்ரீதரின் சகோதரிகள் தந்தையின் வீட்டிற்கு வந்திருந்தபோது மீண்டும் சொத்து பிரச்சினை வெடித்துள்ளது. உறவினர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்த போதிலும், நேற்று மதியம் மீண்டும் தந்தை – மகன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற ஸ்ரீதர், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தை தனபாலை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதனைத் தடுக்க முயன்ற தனது சகோதரி பிரியாவையும் அவர் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தனபால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

   

தனபாலின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், ஸ்ரீதரை பிடித்து கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த தனபாலின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், நிலத்திற்காகப் பெற்ற தந்தையையே மகன் கொலை செய்த விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.