“என்கூட வரமாட்டியா…” மகளை காப்பாற்ற பாய்ந்த பெற்றோர்… மனைவி, மாமனார், மாமியாரையும் சரமாரியாக குத்தி…. குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

By Devi Ramu on புரட்டாதி 16, 2026

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை வட்டம், இடப்பற்றை கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா. இவர் கணவர் ராஜேஷுடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமாக அவரைப் பிரிந்து, தனது பெற்றோர் ரவி மற்றும் சாந்தியுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், ராஜேஷ் திடீரென ரேகாவின் வீட்டிற்குச் சென்று, தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு வற்புறுத்தித் தகராறில் ஈடுபட்டுள்ளார். ரேகா வர மறுத்ததால் ஆத்திரமடைந்த ராஜேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரேகாவைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதைப் பார்த்து அலறியடித்துக்கொண்டு ஓடிவந்த மாமனார் ரவி மற்றும் மாமியார் சாந்தி ஆகியோரையும் ராஜேஷ் இரக்கமின்றி கத்தியால் குத்திச் சாய்த்தார்.

   

மூவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழவே, ராஜேஷ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். படுகாயமடைந்த மூவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் ராணிப்பேட்டை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆர்.கே.பேட்டை போலிஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கொடூர மருமகன் ராஜேஷைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.