அடப்பாவமே! அம்மா வீட்டுக்கு போனது ஒரு குத்தமா? மாமியாரை கொளுத்திய மருமகன்.. காட்டிக்கொடுத்த சாம்பல்…தேடுதல் வேட்டையில் போலீஸ்…!!

By Gayathri on ஆவணி 8, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள ஜித்னியா கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்தேய். கணவனை இழந்த இவருக்கு சுரேஷ் என்ற மகனும், மீனா குமாரி என்ற மகளும் உள்ளனர். மீனா குமாரிக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த மகேந்திர பால் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், அவர் அடிக்கடி தனது தாயைப் பார்க்கச் சென்று பல நாட்கள் அங்கேயே தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மனைவியின் இந்தச் செயல் மகேந்திர பாலுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதால், கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. இந்த குடும்பத் தகராறின் உச்சக்கட்டமாக, ஆத்திரமடைந்த மகேந்திர பால் தனது மாமியாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 31-ஆம் தேதி இரவு மோகன்தேய் வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்ட மகேந்திர பால், அங்கு சென்று அவரை கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், தனது குற்றத்தை மறைப்பதற்காக வீட்டின் அருகிலேயே உள்ள மாட்டுத் தொழுவத்தில் உடலை வைத்து தீயிட்டு எரித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். சில நாட்களாக தாயைக் காணாமல் தேடி வந்த மகன் சுரேஷ், வீட்டின் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த சாம்பலைக் கிளறிப் பார்த்துள்ளார். அதில் கருகிய நிலையில் மனித எலும்புத் துண்டுகளும், வளையல்களும் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தனது தாயை கொலை செய்து எரித்திருக்கலாம் என உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

   

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அமரியா பகுதி காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள், அங்கிருந்த எலும்புகள் மற்றும் பொருட்களைக் கைப்பற்றி தீவிர விசாரணையில் இறங்கினர். மீட்கப்பட்ட உடல் பாகங்கள் மோகன்தேயுடையது தானா என்பதை உறுதிப்படுத்த தடயவியல் மற்றும் மரபணு பரிசோதனைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகன் சுரேஷ் அளித்த புகாரின் பேரில், கொலை மற்றும் தடயங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மகேந்திர பாலைப் பிடிக்க தனிப்படையமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். மனைவியின் மீதான கோபத்தில் மாமியாரை மருமகனே கொடூரமாக எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.