மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தின் மாதவ் பால் நிகேதன் மற்றும் முதியோர் இல்லத்தின் அறை எண் 2 இல் ஒரு வயதான தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக தங்களின் பிள்ளைகள் ஆதரவு இல்லாததால் இங்கு வசித்து வந்தனர். முதியோர் இல்லத்தில் வசித்து வந்த இந்த தம்பதியினர் தற்போது பிரிந்துவிட்டனர். 88 வயதான குன்வர் ராஜ் பிஜ்ஜன் அதிகாலையில் காலமானார்.
அவர் இறப்பதற்கு முன், காவல்துறையினர் அவருக்கு மரியாதை செலுத்தும் அளவுக்கு ஒரு செயலை அவர் செய்திருந்தார். மாவட்ட நிர்வாகம் அவரது உடலை இறுதிச் சடங்குகளுக்காக வைத்திருந்தது. அவரது இறுதிச் சடங்கின் போது வந்த அவரது மகன், அவரது உடலைத் தொடக்கூட அனுமதிக்கப்படவில்லை. அவர் இறப்பதற்கு முன்பாக தனது வாழ்நாளில் தன்னை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தனது மரணத்திற்குப் பிறகு தனது உடலைத் தொடக்கூடாது என்று கூறியிருந்தாராம். மேலும், அவர் ஏற்கனவே அங்குள்ள மருத்துவ கல்லூரியில் உடல் தானத்திற்காக பதிவு செய்திருந்தார் . அவரது மரணத்திற்குப் பிறகு, ஆசிரம நிர்வாகம் அவரது கடைசி விருப்பத்திற்கு இணங்க அவரது உடலை மருத்துவக் கல்லூரியிடம் ஒப்படைத்தது.
