“இதுவரை நல்லா இல்லை”…. மேடையிலேயே முதல்வர் விஜய்யை அதிரடியாக விமர்சித்த சாலமன் பாப்பையா….. ஒரே வார்த்தையில் இப்படி முடிச்சி விட்டுட்டாரே….!

By Nanthini on ஆடி 12, 2026

Spread the love

மதுரை தனக்கன்குளம் பகுதியில் பிரபல நகைச்சுவை நடிகர் மதுரை முத்துவின் இல்லத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நூலகத்தின் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நூலகத்தைத் திறந்து வைத்த பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா, ஏழை எளிய மாணவர்களுக்குப் புத்தகங்கள், புத்தாடைகள் மற்றும் மரக்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கும் நூலகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்று குறிப்பிட்டதோடு, தற்கால இளைஞர்களிடம் அறிவுத்திறனும் படைப்பாற்றலும் அதிகரித்திருந்தாலும், அவர்களிடம் சமூகப் பொறுப்புணர்வு எந்தளவுக்கு இருக்கிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்று தனது கவலையை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து பேசிய பேராசிரியர் சாலமன் பாப்பையா, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கல்விக்கொள்கை குறித்துப் பரபரப்பான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையைத் தான் திட்டவட்டமாக மறுப்பதாகக் கூறினார். தமிழகத்திற்கு இருமொழிக் கொள்கையே போதுமானது என்றும், தேவையான நேரத்தில் மக்கள் தங்களுக்கு விருப்பமான வேறொரு மொழியைக் கற்றுக் கொள்ளலாமே தவிர, மும்மொழிக் கொள்கை என்பது எதிர்காலத்தில் தங்களின் மீது வேறு ஒரு மொழியைத் திணிப்பதற்கான ஒரு வழியாக அமைந்துவிடக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

   

மேலும், தமிழக முதல்வர் விஜய்யின் தற்போதைய ஆட்சிச் செயல்பாடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “காலம் போகட்டும் பார்ப்போம்; இதுவரை அவரது செயல்பாடுகள் நன்றாக இல்லை, இதற்குப் பின்பு நன்றாக இருக்கலாமோ என்னவோ” என்று சாலமன் பாப்பையா விமர்சித்தார். சமுதாயத்தில் ஒழுக்கமும் பண்பாட்டு மதிப்புகளும் குறைந்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்காலக் குடும்பங்களில் பாசத்தையும் உறவுகளையும் தாண்டி பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நிலை உருவாகிவிட்டதாகவும், லஞ்சமும் ஊழலும் அனைத்து நிலைகளிலும் அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம் என்றும் வருத்தம் தெரிவித்தார். இறுதியாக, இளைஞர்களிடம் நாட்டுப்பற்று வளர வேண்டும் என்றும், எந்தக் கட்சியில் இருந்தாலும் அனைவரும் நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.