உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில், ராணுவ வீரரான ஹர்ஷவர்தன் தீபக், இன்ஸ்டாகிராம் மூலம் 11ஆம் வகுப்பு மாணவியுடன் பழகி காதலில் இருந்துள்ளார். தீபக்கிற்கு நவம்பர் 30ஆம் தேதி வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், அந்த மாணவி அவரைக் கட்டாயம் திருமணம் செய்துகொள்ளும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், நவம்பர் 10ஆம் தேதி பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வந்த மாணவி, பூங்காவில் தீபக்கைச் சந்தித்துள்ளார். அப்போது, மாணவி அவரை மிரட்டியதால் ஆத்திரமடைந்த தீபக், பெற்றோரிடம் அறிமுகப்படுத்துவதாகக் கூறி அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். நகரில் இருந்து தொலைவில் உள்ள தர்வை என்ற ஆள் நடமாட்டம் இல்லாத தோட்டத்தில், மாணவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து, அங்கிருந்த மரத்தடியில் புதைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
நவம்பர் 15 அன்று, அப்பகுதியில் தோண்டப்பட்ட அடையாளம் இருப்பதைக் கண்ட உள்ளூர்வாசிகள், புதைக்கப்பட்டிருந்த உடலைக் கண்டறிந்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்தில் கிடைத்த பள்ளிப் புத்தகத்தில் இருந்த மாணவியின் பெயர் மற்றும் தொலைபேசி எண் மூலமும், சிசிடிவி காட்சிகளில் தீபக்குடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பதிவின் மூலமும் போலீசார் தீபக்கைக் கைது செய்தனர். திருமணம் வற்புறுத்தலால் திட்டமிட்டுக் கொலை செய்ததாக ராணுவ வீரர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்போது அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
