“தூங்கிக் கொண்டிருந்த காதலன்.. ரத்த வெள்ளத்தில் துடித்த உயிர்”…. கொல்கத்தாவில் லிவ்-இன் காதலி செய்த பயங்கரம்….!

By Nanthini on கார்த்திகை 9, 2026

Spread the love

கொல்கத்தாவின் காரியா பகுதியில் உள்ள பர்தாபாத் பகுதியில், சாப்ட்வேர் இன்ஜினியரான சர்தக் சர்கார் என்பவர் தனது காதலி சஞ்சலிகா பாசு மற்றும் அவரது தாயார் மௌமிதாவுடன் வாடகை வீட்டில் லிவ்-இன் முறையில் வசித்து வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை காளி பூஜைக்காக பட்டாசுகளும், இறைச்சியும் வாங்கி மகிழ்ச்சியாக வீடு திரும்பிய இவர்களுக்கு இடையே, இரவில் தனிப்பட்ட விஷயம் தொடர்பாக திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

   

ஆரம்பத்தில் சாதாரண சண்டையாகத் தொடங்கிய இந்தத் தகராறு முற்றிய நிலையில், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகக் கூறப்படும் சூழலில், ஆத்திரமடைந்த சஞ்சலிகா கத்தியை எடுத்து சர்தக் சர்காரின் தோள்பட்டையில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் படுக்கையிலேயே சரிந்துள்ளார். நள்ளிரவில் நடந்த இந்த திடீர் தாக்குதலில் சர்தக் சர்கார் படுகாயமடைந்துள்ளார்.

   

அதிகாலை சுமார் 1.30 மணியளவில் சஞ்சலிகா அழுதுகொண்டே வீட்டை விட்டு வெளியே வந்து அக்கம்பக்கத்தினரிடம் உதவி கேட்டுள்ளார். பதறிப்போய் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, சர்தக் சர்கார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும், உதவி கேட்ட சஞ்சலிகாவின் கழுத்திலும் பல கீறல்கள் இருந்ததை அவர்கள் கவனித்துள்ளனர்.

 

உடனடியாக இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது; விரைந்து வந்த போலீசார் சர்தக் சர்காரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சஞ்சலிகா பாசுவைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்தக் கொலையில் சஞ்சலிகாவின் தாய் மௌமிதாவுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலும் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். தாக்குதல் நடந்தபோது தாயும் உடன் இருந்தாரா, கொலையில் அவரது பங்கு என்ன என்பது குறித்தும், காதலர்கள் இடையே ஏற்பட்ட அந்தத் தகராறுக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.