“வாழ்க்கைப் போரில் தோற்றுவிட்டேன்… என் மனைவிதான் காரணம்”: கோரக்பூர் காட்டில் தூக்கில் தொங்கிய சாப்ட்வேர் இன்ஜினியர் – வாட்ஸ்அப் வீடியோவால் பரபரப்பு..!!

By Swetha on வைகாசி 16, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், தனது மனைவியின் தொடர் கொடுமைகளால் மனமுடைந்த பிரத்யும்ன் யாதவ் (33) என்ற மென்பொருள் பொறியாளர், அங்குள்ள குஸ்மி காட்டுப்பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குஷிநகரைச் சேர்ந்த இவருக்கும் அர்பிதா யாதவ் என்ற பெண்ணுக்கும் கடந்த 2017-ல் திருமணமாகி 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணமான சில மாதங்களிலேயே கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மனைவி கணவர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் பராமரிப்பு வழக்குத் தொடர்ந்ததால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக இந்தூரில் பணிபுரிந்து வந்த பிரத்யும்ன், கடந்த மே 10-ஆம் தேதி குஷிநகர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். நீதிமன்ற விசாரணை முடிந்து அடுத்த வாய்தா ஜூலை மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டதால், அடிக்கடி விடுப்பு எடுத்து வர வேண்டிய சூழ்நிலை மற்றும் மனைவியின் தொடர் துன்புறுத்தல்களால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். இதையடுத்து, ஊருக்குத் திரும்புவதற்காக கோரக்பூர் நோக்கிச் சென்ற அவர், வழியில் உள்ள புகழ்பெற்ற ‘புடியா மாய்’ கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்று தற்கொலை செய்துகொண்டார்.

   

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக பிரத்யும்ன் ஒரு உருக்கமான வீடியோவை பதிவு செய்து அதை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாகவும் வைத்துள்ளார். அந்த வீடியோவில், “வாழ்க்கைப் போரில் நான் தோற்றுவிட்டேன், எனது இந்த நிலைக்கு என் மனைவிதான் காரணம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது அண்ணனிடம் வயதான காலத்தில் பெற்றோரைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்ளுமாறு வேண்டியுள்ளார். வியாழக்கிழமை அன்று காட்டில் சடலமாக மீட்கப்பட்ட அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார், மொபைல் போன் ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.