பள்ளிப் பையில் காத்திருந்த எமன்… புத்தகத்தை எடுக்கப் போன சிறுவனுக்கு நேர்ந்த அதிர்ச்சி…!

By Nanthini on தை 18, 2026

Spread the love

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பள்ளிச் சிறுவன் ஒருவனின் புத்தகப் பைக்குள் விஷ நாகப்பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தாணி பகுதியைச் சேர்ந்த அப்துல் அஸீஸ் என்பவரின் மகன் சிராஜ், முதலாம் வகுப்பு படித்து வருகிறான். வழக்கம்போல் பள்ளி மற்றும் டியூசன் முடிந்து வீடு திரும்பிய சிறுவன், தனது புத்தகப் பையை மேஜையில் வைத்துள்ளான். மறுநாள் காலை வீட்டைச் சுத்தம் செய்யும் போது, பையை நகர்த்தியபோது அதற்குள் நாகப்பாம்பு இருப்பதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து அலறியடித்தபடி பையை வெளியே வீசியுள்ளனர்.

உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பாம்பு பிடி வீரர் ரின்சாத் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பைக்குள் இருந்த நாகப்பாம்பை லாவகமாகப் பிடித்தார். பிடிபட்ட பாம்பு வனத்துறையினரின் முன்னிலையில் அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. சிறுவன் பையை வைத்திருந்த நேரத்திலோ அல்லது பயன்படுத்திய போதோ அசம்பாவிதம் ஏதும் நிகழாதது பெரும் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.