விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் நடந்த ரவுடியின் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி காளையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தப்பு இசைக்கலைஞரான தங்கமுனீஸ்வரன் (26) என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருடைய குற்றப்பின்னணி காரணமாக காவல் துறையினரால் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சமீபத்தில் குண்டர் தடுப்பு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு சிறையிலிருந்து வெளியே வந்த தங்கமுனீஸ்வரன், சிவகாசி விஜயலட்சுமி காலனியைச் சேர்ந்த மருதாயி (40) என்பவருடன் முன்பகை காரணமாக மோதலில் ஈடுபட்டு வந்தார். ஏற்கனவே மருதாயி அளித்த புகாரின் பேரிலேயே தான் சிறை செல்ல நேரிட்டதாகக் கருதிய தங்கமுனீஸ்வரன், “உன்னை சும்மா விடமாட்டேன்” எனத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று தனது நண்பர்கள் இருவருடன் மருதாயியின் வீட்டிற்குச் சென்ற தங்கமுனீஸ்வரன், நண்பர்களை வெளியே நிற்க வைத்துவிட்டு வீட்டின் உள்ளே தனியாகச் சென்றுள்ளார். அவர் உள்ளே சென்றதும், திட்டமிட்டு மறைந்திருந்த மருதாயியின் மகன் வீட்டின் கதவைப் பூட்டினார். அதே நேரத்தில், சமையலறையில் இருந்து ஓடிவந்த முத்துமாரி என்ற பெண் தங்கமுனீஸ்வரனின் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவினார். இதனால் நிலைதடுமாறிய அவரை, மருதாயி மற்றும் அவருடைய தோழிகளான ரம்யா, ஈஸ்வரி மற்றும் நண்பர் செல்வகுமார் ஆகியோர் சேர்ந்து கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
‘கோலமாவு கோகிலா’ திரைப்படப் பாணியில் பெண்கள் இணைந்து நடத்திய இக்கொலை சம்பவம் குறித்து சிவகாசி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக மருதாயியைக் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவருடன் சேர்ந்து இக்கொலையில் ஈடுபட்ட செல்வகுமார், ரம்யா, முத்துமாரி, ஈஸ்வரி மற்றும் மருதாயியின் மகன் ஆகிய மேலும் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
