தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்து புகழின் உச்சியில் இருந்தார். சிவாஜி நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். அதன் பின்னர் 25 ஆண்டுகள் சிவாஜி கணேசன் தன் நடிப்பாற்றலால் தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்தார்.
சிவாஜி அதிக எண்ணிக்கையில் நடித்தது இயக்குனர் பீம்சிங் இயக்கத்தில்தான். அந்த அளவுக்கு அவர்கள் இருவருக்கும் இடையிலான நட்பு இருந்தது. அவர்கள் இருவரும் இணையும் படங்களின் ஷூட்டிங்கில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்ததுள்ளன. அவற்றில் ஒன்றை இப்போது பார்ப்போம்.
1965-ம் ஆண்டு ஏ.பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் வெளியான படம் சாந்தி. சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, தேவிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.வி – ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்திருந்தனர். கவியரசர் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார். இந்த படத்தில் வரும் பாடல்களையும் பி.சுசீலா டி.எம்.எஸ். பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆகியோர் பாடியிருந்தனர்.
இந்த படத்தில் வரும் ‘’யார் அந்த நிலவு’ என்ற பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடலாக உள்ளது. இந்த பாடலைப் படம் பிடிப்பதற்கு முதல்நாள் சிவாஜிக்கு இந்த பாடலைக் கொடுத்து கேட்க சொல்லியுள்ளனர். பாடலைக் கேட்ட சிவாஜி கணேசன் மறுநாள் நடக்க இருந்த ஷூட்டிங்கை ஒரு வாரம் தள்ளி வைத்துள்ளார். இது இயக்குனர் பீம்சிங்குக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்துள்ளது.
இதுகுறித்து சிவாஜியிடம் அவர் கேட்டுள்ளார். அப்போது சிவாஜி “இந்த பாடலுக்கு எம்.எஸ்.வி அற்புதமாக இசையமைத்துள்ளார். டி.எம்.எஸ்.மிக அற்புதமாக பாடியுள்ளார். இது எனக்கு ஒரு சவால் இதற்கு ஏற்ப நான் நடிக்க வேண்டும் என்றால் எனக்கு கால அவகாசம் வேண்டும்” என்று சொல்லி ஒரு வாரம் கழித்து படப்பிடிப்பை வைத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார். அந்த பாடலில் சிவாஜியின் நடிப்பு ரசிக்கும்படியான ஒன்றாக அமைந்துள்ளது.