நடிகர் சிவாஜிகணேசன் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். சுமார் 288 படங்களில் சிவாஜி கணேசன் நடித்துள்ளார். பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அவரது குரல் வளம், தெளிவான உச்சரிப்பு, உணர்ச்சிகரமான நடிப்பு ஆகியவற்றிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
சிவாஜிகணேசன் பத்மஸ்ரீ, பத்மபூஷன், தாதா சாகிப் பால்கே உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருதினை பெற்ற முதல் இந்திய நடிகர் என்ற பெருமை சிவாஜி கணேசனை சேரும். நடிப்பில் சிவாஜி கணேசனை மிஞ்ச முடியாது. சிவாஜி கணேசன் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அதற்கான அர்ப்பணிப்பு முழுமையாக இருக்கும்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது காட்சிகள் முடிந்த பின்னரும் அவர் அங்கேயே இருந்து மற்ற நடிகர்களின் நடிப்பை கவனிப்பார். எப்போதும் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிளம்பியது இல்லை சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டால் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அப்படி இருக்க கூண்டுக்கிளி திரைப்படத்தில் நடிக்கும் போது மட்டும் தனது காட்சிகளை நடித்து முடித்துவிட்டு சிவாஜி கணேசன் அங்கிருந்து கிளம்பி விடுவாராம்.
கடந்த 1954-ஆம் ஆண்டு கூண்டுக்கிளி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை டி.ஆர் ராமண்ணா இயக்கினார். இதில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்டோர் நடித்தனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நீங்கள் இப்படி கிளம்ப மாட்டீர்களே என ஒரு முறை ராமண்ணா சிவாஜி கணேசனிடம் கேட்டுள்ளார்.
அதற்கு சிவாஜி கணேசன் உங்களுக்கே தெரியும். நான் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உடையவன். மற்ற படங்களின் சூட்டிங் ஸ்பாட் என்றால் அங்கேயே புகை பிடிப்பேன். ஆனால் இப்போது எம்ஜிஆர் நடித்துக் கொண்டிருக்கிறார். எம்ஜிஆர் அண்ணா முன்பு நான் எப்படி புகைப்பிடிப்பேன். அதனால் தான் இங்கிருந்து கிளம்புகிறேன் என கூறினாராம். இந்த தகவலை சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.