தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்து புகழின் உச்சியில் இருந்தார். சிவாஜி நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் வெளியாகி அதுவரை காணாத வெற்றியைப் பெற்றது.
ஒரே படத்தில் சிவாஜி கணேசன் முன்னணி நடிகராகவும், திறமையான நடிகராகவும் அறியப்பட்டார். அதன் பின்னர் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக அவர் தமிழ் சினிமாவின் கொடுமுடியாக வலம் வந்தார். எம் ஜி ஆர் –சிவாஜி என்ற இருமைதான் தமிழ் சினிமாவில் கோலோச்சியது.
சிவாஜி கணேசன் 6 வயது சிறுவனாக இருக்கும் போதே நாடகக் கம்பெனியில் சேர்ந்து பல வேடங்களில் நடித்தார். பதின் வயதை எட்டியதும் அவருக்குப் பெண் வேடங்கள் கொடுக்கப்பட்டன. அதிலும் அவர் தன் திறமையை வெளிக்காட்டி ரசிகர்களின் மத்தியில் பிரபலம் ஆனார். அதன் பின்னர்தான் அவருக்கு தன்னுடைய 24 ஆவது வயதில் பராசக்தி பட வாய்ப்பு வந்துள்ளது.
இந்நிலையில் தான் ஏன் 6 வயதிலேயே நாடகக்கம்பெனியில் சேர்ந்தேன் என்பது ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “நான் பிறந்தவுடனேயே என் அப்பா கைது செய்யப்பட்டார். அவர் ஒரு தேசியவாதி. அப்பா சிறையில் இருந்ததால் குடும்பத்தில் பொருளாதார சூழ்நிலை மோசமாக இருந்தது. எங்கள் ஊரில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் போடுவார்கள். அதைப் பார்க்கும் போது எனக்கும் நடிக்க வேண்டும் என ஆசை வந்துவிட்டது. அதனால் நான் நாடகக் கம்பெனிக்கு சென்று அப்பா அம்மா இறந்துவிட்டார்கள் என சொல்லி சேர்ந்துவிட்டேன். அதிலிருந்து 6 வருடங்கள் நான் என் பெற்றோரைப் பார்க்கவேயில்லை. ஒரு வேளை நான் இறந்துவிட்டேன் எனக் கூட அவர்கள் நினைத்திருப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.