தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்து புகழின் உச்சியில் இருந்தார். சிவாஜி நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் வேக வேகமாக வளர்ந்துள்ளது.
இந்த படத்தின் தயாரிப்பாளராக பெருமாள் இருந்தாலும், படத்துக்கு பைனான்ஸ் செய்தது ஏவிஎம் நிறுவனம்தான். கிட்டத்தட்ட பாதி முடிந்த படத்தை ஏவிஎம் செட்டியாருக்கு போட்டுக் காட்டியுள்ளார் பெருமாள். எடுக்கபட்ட காட்சிகளில் சிவாஜி கணேசன் சிறப்பாக நடித்திருந்தாலும் அவர் மிகவும் ஒல்லியாக இருந்ததால் கதாபாத்திரத்துக்கு பொருந்தவில்லை எனக் கூறியுள்ளார் செட்டியார். சிவாஜிக்கு பதில் எம் கே ராதாவை நடிக்கவைக்கலாம் என சொல்லியுள்ளார். ஆனால் பெருமாள் முதலியார் சிவாஜிதான் வேண்டும் என உறுதியாக இருந்ததால் அவருக்காக சில மாதங்கள் காத்திருந்து அவர் உடல்பொலிவு பெற்றதும் மீண்டும் காட்சிகளைப் படமாக்கி ரிலீஸ் செய்தனர்.
ஆனால் இதே நேரத்தில் சிவாஜி ஒரு முக்கிய வேடத்தில் நடித்த பூங்கோதை என்ற படமும் வேகமாக உருவாகி வந்தது. அந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவானது. தமிழில் பூங்கோதை என்ற பெயரிலும் தெலுங்கில் பரதேசி என்ற பெயரிலும் உருவானது. அக்கினி நாகேஸ்வர ராவ், அஞ்சலி தேவி ஆகியோர் நடித்த இந்த படத்தில் சிவாஜி கணேசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார்.
பராசக்தி தாமதத்தால் இந்த படம் முதலில் ரிலீஸ் ஆவது போல இருந்துள்ளது. ஆனால் பராசக்தி படம் முதலில் ரிலீஸ் ஆனால் சிவாஜியின் கேரியருக்கு அது பயனுள்ளதாக இருக்கும் என படத்தின் தயாரிப்பாளர் அஞ்சலி தேவியிடம் கூறியுள்ளனர். அவரும் அதை ஏற்றுக்கொண்டு தன்னுடைய படத்தின் ரிலீஸை தள்ளி வைத்துக் கொள்ளவே பராசக்தி திரைப்படம் முதலில் ரிலீஸ் ஆனது.