CINEMA
அந்த ஒருநாளில் மட்டும் சிவாஜி நடிக்காமல் இருக்கமாட்டார்… உடம்பு சரி இல்லாதப்ப கூட டாக்டரோடு வருவார் – பிரபல நடிகர் பகிர்ந்த ஆச்சர்ய தகவல்!
தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கணேசனாக நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது அவர் நடித்த பல நாடகங்கள் தமிழகத்தின் பல மூளைகளில் அரங்கேறி கணேசன் (அப்போது சிவாஜி என்ற பட்டம் கொடுக்கப்படவில்லை) புகழைப் பரப்பின.
சிவாஜி கணேசன் நாடகக் கம்பெனியில் சேர்ந்ததே ஒரு சுவாரஸ்யமான சம்பவம். இதுபற்றி அவரே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அதில் “எங்கள் ஊரில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் போடுவார்கள். அதைப் பார்க்கும் போது எனக்கும் நடிக்க வேண்டும் என ஆசை வந்துவிட்டது. அதனால் நான் நாடகக் கம்பெனிக்கு சென்று அப்பா அம்மா இறந்துவிட்டார்கள் என சொல்லி சேர்ந்துவிட்டேன். அதிலிருந்து 6 வருடங்கள் நான் என் பெற்றோரைப் பார்க்கவேயில்லை. ஒரு வேளை நான் இறந்துவிட்டேன் எனக் கூட அவர்கள் நினைத்திருப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.
வளர்ந்த பின்னர் பெண் வேடத்தில் நடித்த சிவாஜி அதன் மூலம் பராசக்தி படத்தின் கதாநாயகன் வேடத்தைப் பெற்றார். அதன் பிறகு அவருக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். 2002 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை தொடர்ந்து நடித்து வந்தார்.
இந்நிலையில் சிவாஜி பற்றி நடிகர் டெல்லி கணேஷ் ஒரு ஆச்சர்யமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் “சிவாஜி சாரோடு எனக்கு ஆழமான நட்பு உண்டு. நான் எப்போது அவரைப் பார்த்தாலும் அவர் காலில் விழுந்து வணங்குவேன். கடைசியாக அவரை என் ஆசை ராசாவே படத்தின் ஷூட்டிங்கில் பார்த்தேன்.
அவர் எந்த காரணம் இருந்தாலும் ஜனவரி 1 ஆம் தேதி மட்டும் நடிக்காமல் இருக்க மாட்டார். அது அவருக்கு ஒரு பழக்கம். அந்த ஷூட்டிங்கில் உடல் நிலை சரியில்லாத போதும், டாக்டரோடு வந்து நடித்துக் கொடுத்துவிட்டுப் போனார். அன்றுதான் நான் அவரைக் கடைசியாகப் பார்த்தேன்” எனக் கூறியுள்ளார்.