சிவகங்கை மாவட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை இழைத்த வழக்கில், விறகு வெட்டும் தொழிலாளிக்கு ஐந்து தூக்கு தண்டனைகளை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. சிவகங்கையைச் சேர்ந்த சந்திரன் (வயது 45) என்பவர், அப்பகுதியைச் சேர்ந்த சிறுமிகளுக்கு தின்பண்டங்கள் வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்களுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியது விசாரணையில் உறுதியானது. பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் தனது பெற்றோரிடம் அளித்த தகவலின் அடிப்படையில், கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருப்பத்தூர் மகளிர் காவல்துறையினர் சந்திரனை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றவாளியின் செயல் சமூகத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, அவருக்கு ஐந்து மரண தண்டனைகளை வழங்கினார். இதுமட்டுமின்றி, நான்கு ஆயுள் தண்டனைகள் மற்றும் 22 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட ஐந்து சிறுமிகளுக்கும் தலா 7 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 35 லட்சம் ரூபாயை அபராதமாக வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இத்தீர்ப்பு ஒரு பெரும் எச்சரிக்கையாக அமையும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
