தமிழ் சினிமா உலகில் இன்றிருக்கும் மிக பிரபலமான கமர்ஷிடல் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் சிறுத்தை சிவா. கடந்த 2011 ஆம் ஆண்டு கார்த்திக் மற்றும் தமன்னா நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த சிறுத்தை திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு முன்னர் தெலுங்கில் சில படங்களை இயக்கியுள்ளார்.
தன்னுடைய முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்ட நிலையில் அந்த படத்திற்கு பிறகு தான் சிவா என்று பெயர் கொண்ட இவர் சிறுத்தை சிவா என்று மாறினார். சிறுத்தை படம் தந்த வெற்றியால் இவர் உடனடியாக அஜித்தை வைத்து வீரம் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
அந்த படம் 2014 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதையடுத்து அவர் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் ஆனார். தொடர்ந்து அஜித்தை வைத்து வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கினார். இதில் விவேகம் தவிர மற்ற படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றன.
அதன் பின்னர் அவர் ரஜினியை வைத்து இயக்கிய அண்ணாத்த திரைப்படமும் சூர்யாவை வைத்து இயக்கிய கங்குவா திரைப்படமும் தோல்விப் படங்களாக அமைந்தன. இதனால் சமூகவலைதளங்களில் அதிகம் ட்ரோல் செய்யப்படும் இயக்குனராக சிறுத்தை சிவா மாறியுள்ளார்.
இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்குனர் ஆவதற்கு முன்பே 7 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது பலரும் அறியாத விஷயம். சென்னை திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவு பட்டம் பெற்ற அவர் தமிழில் சார்லி சாப்ளின் மற்றும் மனசெல்லாம் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள அவர் தெலுங்கில் 4 படங்களுக்கும் மலையாளத்தில் ஒரு படத்துக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். அதன் பின்னர்தான் அவர் தெலுங்கில் இயக்குனராகி பின்னர் தமிழிலும் இயக்குனர் ஆனார்.