கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நடைபாதையில் நின்று கொண்டிருந்த 25 வயதான தொழில்முறை பாடகர் கௌரவ், அருகே சென்ற 11 கே.வி உயர் மின்னழுத்த கம்பி மீது எதிர்பாராதவிதமாக கை பட்டதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கௌரவ் தனது பெண் தோழியுடன் அந்த ஹோட்டலுக்கு வந்திருந்த நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஹோட்டலின் நடைபாதை ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தபோது, அங்கு மிகவும் அருகில் சென்ற உயர் மின்னழுத்த மின்கம்பியை அவர் தொட்டதால் உடனடியாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் முழுவதும் ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
https://twitter.com/HateDetectors/status/2098396145676394908/video/1
உத்தரப் பிரதேச மாநிலம் கௌதம் புத்த நகர் மாவட்டத்தைச் சேர்ந்த கௌரவ், ஒரு பாடகராகப் பணியாற்றி வந்தார். சம்பவத்தைப் பற்றித் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்று, அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
