சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில், ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் (SI) ராஜ் (58) தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட சம்பவம், பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் அதிர்ச்சியூட்டும் கொலை வழக்காக மாறியுள்ளது. துவக்கத்தில் தற்கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்ட நிலையில், உடற்கூறாய்வு முடிவுகள் மற்றும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் உதவியால் உண்மையான கொலையாளிகள் காவல்துறையினரின் வலையில் சிக்கியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ், தனது மனைவி செல்வராணி (32) மற்றும் குழந்தைகளுடன் நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்தார். தங்களுக்கு இடையேயான 26 வயது வித்தியாசம் மற்றும் குடும்பச் சிக்கல்களால் தம்பதியிடையே மனக்கசப்பு நிலவி வந்தது. இதனிடையே, வழக்கறிஞரான செல்வராணிக்கு தேவா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியது. இதனையறிந்த ராஜ், மனைவியின் நடத்தையைக் கண்காணிப்பதற்காக வீட்டின் அருகிலேயே சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராணியும் தேவாவும் சேர்ந்து ராஜைக் கொலை செய்ய முடிவு செய்தனர்.
திட்டத்தின்படி, சம்பவத்தன்று செல்வராணி தனது கணவருக்குக் கொடுத்த உணவில் அதிக அளவிலான தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளார். ராஜ் மயங்கிய நிலைக்குச் சென்றதும், வீட்டிற்கு வந்த கள்ளக்காதலன் தேவாவும் செல்வராணியும் இணைந்து, ரேகை படியாதவாறு துணியால் ராஜின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்தனர். பின்னர், ஏற்கனவே ராஜ் மீது இருந்த ஒரு வழக்கினால் ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்துகொண்டது போலக் காட்ட, சடலத்தின் மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்து எரித்துவிட்டு தற்கொலை நாடகமாடியுள்ளனர்.
எனினும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் ராஜின் உடலில் அதிகளவு தூக்க மாத்திரைகள் இருந்ததும், கழுத்து நெரிக்கப்பட்டிருந்ததும் அம்பலமானது. மேலும், சம்பவத்தன்று மாலை வீட்டின் சிசிடிவி கேமராவில் இளைஞர் ஒருவர் அவசரமாக பைக்கில் வெளியேறும் காட்சிகள் பதிவாகியிருந்தன. சந்தேகமடைந்த காவல்துறையினர் செல்வராணியை தீவிர விசாரணைக்கு உட்படுத்தியபோது, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றதை அவர் ஒப்புக் கொண்டார். அதைத் தொடர்ந்து செல்வராணி மற்றும் அவரது கள்ளக்காதலன் தேவா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
