ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயரின் சகோதரி ஸ்ரேஸ்தா ஐயருக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான ட்ரோல்களும், மிரட்டல்களும் விடுக்கப்பட்டு வருகின்றன. லீக் சுற்றின் இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 15 புள்ளிகளுடன் வெளியேறிய நிலையில், வான்கடே மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் 16 புள்ளிகளுடன் பிளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது. வெறும் ஒரு புள்ளி வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வாய்ப்பை இழந்ததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், ஸ்ரேஸ்தா ஐயர் முன்னதாக வெளியிட்ட வைரல் வீடியோ ஒன்றை இதற்குக் காரணமாகக் கூறி, அவரைத் தனிப்பட்ட முறையில் குறிவைத்துத் தாக்கி வருகின்றனர்.
பஞ்சாபியர்களுக்குப் பெரிய இதயம் உண்டு என்பதைக் காட்டும் வகையில் ஸ்ரேஸ்தா வெளியிட்ட அந்த வீடியோ, பின்னர் அவராலேயே நீக்கப்பட்டாலும் இணையத்தில் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. இதனால் தனது அலுவலக எண்ணுக்கு ஆபாசமான மிரட்டல் அழைப்புகள் வருவதாக ஸ்ரேஸ்தா ஐயர் சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார். அந்த வீடியோவில், “அது ட்ரோல் செய்வதற்கான வீடியோ அல்ல, சும்மா தமாஷாகப் பேசப்பட்ட ஒரு வீடியோ மட்டுமே; அதன் பின்னணியில் எவ்வித கெட்ட எண்ணமும் இல்லை, எனது சகோதரனின் அணிக்கு நான் ஆதரவு மட்டுமே தெரிவித்தேன்” என்று கூறியுள்ளார். மேலும், தான் யாரையும் அவமதிக்கவில்லை என்றும், தனது சகோதரரும் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதால் அனைத்து வீரர்களையும் மதிப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், வேலையில்லாமல் தங்களுக்கு ஆபாசமான கருத்துக்களைப் பதிவிட்டு வரும் சில ரசிகர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார். தன்னிடம் இருந்து எந்தப் பதிலும் வராததால், தன்னிடம் நடனம் பயிலும் மாணவர்களையும், தனது அலுவலக எண்ணையும் அவர்கள் குறிவைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். வேலை நிமித்தமான அழைப்பு என்று நினைத்து எடுக்கும் தனது சக ஊழியர்களிடம், எல்லை மீறிய நேரங்களில் அழைத்து ஆபாசமான வார்த்தைகளால் மிரட்டி, மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாகவும் அவர் ஆதங்கப்பட்டுள்ளார். எனவே, மற்றவர்களைத் துன்புறுத்தாமல் வெறுப்பைக் குறைத்துக் கொள்ளுமாறும், தன்னிடம் மட்டுமே தங்களது கருத்துக்களைத் தெரிவிக்குமாறும் ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
