மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ராணுவ விமானப் பயிற்சிப் பள்ளியில், பயிற்சி நிறைவு விழாவின் போது கேப்டன் பரத் பரத்வாஜ் என்ற விமானி தனது காதலி ஆருஷியிடம் ஹெலிகாப்டர் முன்பாக மண்டியிட்டு காதலை வெளிப்படுத்திய (Proposal) சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 2ஆம் தேதி நடைபெற்ற பயிற்சி நிறைவு மற்றும் பிரியாவிடை அணிவகுப்பு விழாவின் போது, ராணுவ சீருடையில் இருந்த கேப்டன் பரத், ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டிருந்த போர் ஹெலிகாப்டர் அருகே நின்றுகொண்டிருந்த தனது காதலியிடம் மோதிரத்தை நீட்டி திருமணப் பிரேரணையை முன்வைத்தார். இதனை அவரது காதலி உடனடியாக ஏற்றுக்கொண்டதை அடுத்து, அங்கிருந்த குடும்பத்தினரும் சக அதிகாரிகளும் கைதட்டி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வரும் நிலையில், ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மத்தியில் இந்தச் செயல் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மிக முக்கிய பாதுகாப்பு உபகரணமான போர் ஹெலிகாப்டரின் அருகிலும், கடுமையான பாதுகாப்பு விதிகள் நடைமுறையில் இருக்கும் ராணுவ ஓடுதளத்திலும் (Runway) இது போன்ற தனிப்பட்ட கொண்டாட்டங்களை அனுமதிப்பது ராணுவ ஒழுங்குமுறை மற்றும் நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது என்று உயர் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதிகாரப்பூர்வ ராணுவச் சடங்குகள் மற்றும் மரபுகள் மதிக்கப்பட வேண்டிய உயர் பாதுகாப்பு மண்டலத்தில் அரங்கேறிய இந்த ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக, கேப்டன் பரத் பரத்வாஜிற்கு எதிராக ராணுவத் தரப்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. முதற்கட்டமாக, இந்த விதிமீறல் குறித்து அவரிடம் விளக்கம் கேட்டு விரைவில் ‘ஷோ காஸ்’ (Show Cause) நோட்டீஸ் அனுப்பப்பட வாய்ப்புள்ளதாகவும், அவர் அளிக்கும் விளக்கம் திருப்தியளிக்காத பட்சத்தில் கடுமையான ராணுவத் தண்டனைகளை அவர் எதிர்கொள்ள நேரிடும் என்றும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
