இங்கிலாந்தின் நோர்போக் பகுதியைச் சேர்ந்த 67 வயதான ரோட்னி ஜான்ஸ்டன், ஒரு பெண்ணை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடூரமான முறையில் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கிய வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 1994 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், தொலைதூர கிராமப்புறப் பகுதிகள், ஹோட்டல்கள் மற்றும் வாகனங்கள் போன்ற பல்வேறு இடங்களுக்கு அப்பெண்ணைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று, முன்பின் தெரியாத ஆண்களுடன் பாலியல் செயல்களில் ஈடுபடுமாறு மிரட்டியுள்ளார். இந்த கொடூர சம்பவங்கள் பெரும்பாலும் பல மணிநேரம் நீடித்ததாகவும், சில நாட்களில் 15 ஆண்கள் வரை இதில் ஈடுபட்டதாகவும், வாரத்திற்கு ஐந்து இரவுகள் வரை அப்பெண் இத்தகைய சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் நடுவர் குழுவின் விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
வயது வந்தோருக்கான சமூக வலைத்தளங்கள் வழியாகப் பல ஆண்களைத் தொடர்புகொண்ட ஜான்ஸ்டன், குறிப்பிட்ட நேரங்களிலும் இடங்களிலும் அப்பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வதற்கான வாய்ப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பெருமளவில் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். இந்த கொடூரமான துன்புறுத்தல்களை ஆவணப்படுத்தும் வகையில் ஜான்ஸ்டன் சேகரித்து வைத்திருந்த 30,000-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அடங்கிய தொகுப்பை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். ஜான்ஸ்டன் தன்னை ‘ஒரு பொருளாக மட்டுமே’ நடத்திய ஒரு அரக்கன் என்று குறிப்பிட்ட அந்தப் பெண், இந்தத் துன்புறுத்தல்களால் தான் பயன்படுத்தப்பட்டதாகவும், பேரச்சத்தில் வாழ்ந்ததாகவும், சம்பவங்களுக்குப் பிறகு தனக்கு மிகவும் அருவருப்பாக இருந்ததாகவும் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆறு வாரங்கள் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை முழுவதும், அந்தப் பாலியல் உறவுகள் அனைத்தும் அப்பெண்ணின் பரஸ்பர சம்மதத்துடன் தான் நடந்தன என்று கூறி ஜான்ஸ்டன் தன்னை நிரபராதியாகக் காட்ட முயன்றார். இருப்பினும், கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம், பாதிக்கப்பட்ட பெண்ணின் பிள்ளைகள் தற்செயலாக இந்த ஆபாசப் படங்களைக் கண்டறிந்த பிறகே இந்த முப்பது ஆண்டுகாலக் கொடூரம் வெளிச்சத்திற்கு வந்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் இறுதியில், ஜான்ஸ்டன் மீதான குற்றங்கள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு, அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
