கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரை அருகே, சமூக வலைதள செயலிகளை நீக்கியதற்காக 6 வயது பெண் குழந்தையை மரக்கட்டையால் தாக்கித் துன்புறுத்திய தாய் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரைப் பிரிந்து இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ஷோபா என்பவர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி குழந்தையைக் கவனிக்கத் தவறியுள்ளார். கடந்த 9-ஆம் தேதி, சிறுமி விளையாட்டாக தாயின் செல்போனில் இருந்த அந்தச் செயலிகளை நீக்கியதால் ஆத்திரமடைந்த ஷோபா, தனது கைக்குழந்தையைக் கூட பாராமல் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த குழந்தையைக் கட்டிலில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக நாடகமாடி அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு ஷோபா அழைத்துச் சென்றுள்ளார். சிறுமியின் உடலில் இருந்த காயங்களைக் கண்டு சந்தேகமடைந்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக நெய்யாற்றின்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதோடு, காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், தாய் ஷோபாவே குழந்தையைத் தாக்கியது அம்பலமானது.
சமூக வலைதள மோகத்தினால் பெற்ற மகளையே மரக்கட்டையால் சரமாரியாகத் தாக்கி தரையில் வீசிய இந்தச் கொடூரச் செயல் மனிதநேயத்தை உலுக்கியுள்ளது. தன் மீதான சந்தேகத்தை மறைக்க நாடகமாடிய ஷோபாவை காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைதான ஷோபாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் கோபத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
