மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஷிர்பூர் மெர்சண்ட்ஸ் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. வங்கியின் நிதி நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாலும், போதிய வருவாய் ஈட்டும் திறன் இல்லாததாலும் வாடிக்கையாளர்களின் நலனைப் பாதுகாக்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, வங்கி புதிய கடன்களை வழங்கவோ, வைப்புத்தொகைகளைப் பெறவோ அல்லது எந்தவொரு பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவோ உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கியின் செயல்பாடுகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதால், அதன் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், அவர்களின் முதலீடுகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.
இதனால் டெபாசிட் காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்தின் விதிகளின்படி, தகுதியுள்ள ஒவ்வொரு வைப்புத்தொகையாளரும் தங்களின் வைப்புத்தொகைக்கு அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டுத் தொகையைப் பெற முடியும். வங்கியின் நிர்வாகக் குழு கலைக்கப்பட்டு, அதன் சொத்துக்களைக் கொண்டு வாடிக்கையாளர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்துள்ளவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
