செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி உலகெங்கும் பல துறைகளில் புரட்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், அது எதிர்காலத்தில் மனித குலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறக்கூடும் என ஓபன்ஏஐ நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் பால் கிறிஸ்டியானோ எச்சரிக்கை விடுத்துள்ளார். கனடாவில் நடைபெற்ற ‘தி ஹிண்டன் லெக்சர்ஸ் 2026’ நிகழ்வில் உரையாற்றிய அவர், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஏ.ஐ. அமைப்புகள் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவும், அடுத்த 6 முதல் 12 மாதங்களிலேயே இதற்கான ஆரம்பகட்ட ஆபத்துகள் தென்படலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனிதர்களின் கட்டுப்பாட்டை ஏ.ஐ. மீறுவது என்பது, பூமியில் நடைபெற வேண்டிய முக்கிய விவகாரங்களை மனிதர்களுக்குப் பதிலாக இயந்திரங்களே தீர்மானிக்கும் அபாயகரமான சூழலை உருவாக்கும் என அவர் விளக்கமளித்துள்ளார். மேலும், இத்தொழில்நுட்பத்தில் ஏற்படும் தவறுகள் எதிர்காலத்தில் மனித உயிரிழப்புகளுக்குக் கூட வழிவகுக்கலாம் என்று அச்சம் தெரிவித்துள்ள அவர், இவை துல்லியமான அறிவியல் கணிப்புகள் அல்லாமல் தனது தனிப்பட்ட மதிப்பீடுகள் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் காட்டும் அதே வேகத்தை, அதன் பாதுகாப்பு வழிமுறைகளை உறுதி செய்வதிலும் தொழில்நுட்ப நிறுவனங்கள் காட்ட வேண்டும் எனத் துறைசார் வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். போதிய பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள் இன்றி இத்தொழில்நுட்பத்தை முன்னெடுத்துச் சென்றால், எதிர்காலத்தில் மனிதர்கள் தங்களின் அதிகாரத்தை இழக்கும் நிலை உருவாகலாம் என்ற பால் கிறிஸ்டியானோவின் இந்தக் கருத்து சர்வதேச தொழில்நுட்ப வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
