உத்தரப் பிரதேசத்தில் அவுரையா பகுதியில் பெண் ஒருவருக்குக் காலையிலிருந்தே கோல்கப்பா சாப்பிட வேண்டும் என்ற ஆசை எழுந்திருக்கிறது. தன் கணவரிடம் ஆசையாகக் கேட்டுப் பார்த்தும் அவர் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. இதனால் கோபமடைந்த அப்பெண், கணவரை எதிர்பார்க்காமல் தாமாகவே கடைக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார்.
கடைக்குச் சென்றதும் வியாபாரியிடம் பெரிய அளவிலான கோல்கப்பாக்களைத் தருமாறு கேட்டுள்ளார். வியாபாரி கொடுத்த சிறிய பானிபூரிகள் பிடிக்காததால், அவரே பாத்திரத்திலிருந்து மிகப்பெரிய கோல்கப்பாக்களைத் தேர்ந்தெடுத்துத் தரச் சொல்லியுள்ளார். அவ்வாறு ஒவ்வொன்றாக ரசித்துச் சாப்பிட்டவர், எளிதாக 10 பெரிய பானிபூரிகளை வரை சாப்பிட்டு முடித்துள்ளார்.
ஆனால், கடைசியாகச் சாப்பிட்ட மிகப்பெரிய பானிபூரிதான் நிலைமையை தலைகீழாக மாற்றியது. அதை முழுதாக வாயில் திணித்துச் கடிக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அவரது தாடை நகர முடியாமல் அப்படியே விரிந்த நிலையிலேயே சிக்கிக்கொண்டது. அதிர்ச்சியடைந்த கணவர் ஓடிவந்து அவரை உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்கள் தாடையைச் சீரமைக்கப் பலவாறு முயன்றும் முடியாததால், மேல் சிகிச்சைக்காக அவர் பெரிய மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.
